Friday, April 22, 2011

மரண வாயிலில் இருக்கும் ஒரு கைதியின் முதல் கடிதம்




போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு இன்னும் 12 வாரங்களில் அத்தண்டனை நிறைவேற்றப்படுவதை எதிர்நோக்கி சிங்கப்பூர் சிறையில் காத்திருக்கிறார் சாபாவைச் சேர்ந்த யோங் வுய் கொங். அவர், அவரைக் காப்பாற்றுவதற்காக போராடும் இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான யேடியானுக்குக் கடைசி கடைசியாக பல கடிதங்களை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்று.
வணக்கம் யேடியான்,
உங்கள் கடிதத்துக்கு நன்றி. என் கதையைச் சொல்வதற்கு ஊக்கமளித்ததற்கும் உங்களுக்கு நன்றி. இது என் முதலாவது கடிதம். இதில்,என் சிறைவாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.என் பெயர் யோங் வுய் கொங். 2011-தொடக்கத்தில் என் 23வது பிறந்த நாளை சிறையில் கொண்டாடினேன்.சிறைக்கு வெளியில் ஏராளமான நண்பர்களும் அதைச் சேர்ந்தே கொண்டாடினார்கள்.
எதற்காக சிறையில் இருக்கிறேன்? சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்த உதவினேன். பிடித்து விட்டார்கள். பிடிப்பட்டபோது எனக்கு வயது 19. இப்போது சில ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன்-மரணதண்டனையை எதிர்நோக்கியவாறு. எப்போதே அது நிறைவேறியிருக்கும். ஆனால், பலர் எனக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால்தான் இத்தனை நாளாய் பிழைத்திருகிறேன். இல்லையேல் எப்பவோ உலகத்தை விட்டே போயிருப்பேன்.
எனக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது என் தாயாருக்குத் தெரியாது.தொலைதூரம் சென்றிருப்பதாக அவரிடம் பொய் சொல்லியிருக்கிறேன். அதை அவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்.
சிறைக்குள் வாழ்க்கை எப்படி என்பதை அடுத்துச் சொல்கிறேன்.
காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன்.அலாரம் எனக்குத் தேவையில்லை.இதுவே நன்கு பழக்கமாகி விட்டது.எழுந்ததும் பல்துலக்கி, குளிப்பேன். காலை 7 மணிவரை புத்த சமய நூல்களை வாசிப்பேன். அதன்பின் 9 மணிவரை தியானம். நேரத்தைப் போக்குவதற்காக இதைச் செய்வதாக நினைத்துவிட வேண்டாம். இருக்கும் நேரத்தை நல்ல முறையில் செலவிடுவோமே என்ற எண்ணம்தான் காரணம்.
மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை.
காலை 9 மணிக்குக் காலை பசியாறல். சைவ உணவுதான். நான் சைவம் என்பது சிறைக்காவலர்களுக்குத் தெரியும். அதனால் சைவ உணவுதான் கொடுப்பார்கள்.
இப்போதெல்லாம் சைவம் சாப்பிடுவதே பழக்கமாகிப் போனது. சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பல. அவற்றை அனுபவித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எல்லாரும் சைவ உணவை உண்ணும் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பேன்.
முன்பு, விரைவில் சாகப்போகிறோம் என்பதை நினைத்து அஞ்சுவேன். குலுங்கிக் குலுங்கி அழுவேன். இப்போது இல்லை. ஒவ்வொரு வாரமும் என்னைக் காணவரும் புத்த பிட்சு மரணபயத்தை விட்டொழிக்கும் வழியை எனக்குக் கற்றுத்தந்திருக்கிறார்.
இவ்வாண்டின் முற்பகுதியில் இங்கிருந்து ஒரு நண்பர் எங்களைவிட்டுப் பிரிந்தார். அவருக்காக நான் பிரார்த்தனை செய்தேன்.
என் உயிர் போகும்வரை, நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி இங்குள்ளவர்களுக்கு நல்ல புத்திமதிகளை எடுத்துரைப்பேன். போதைப் போருளை நாட வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறுவேன்.
கடந்த சில ஆண்டுகளாக என் அண்ணன் யுன் லியோங்குடன் என் உறவு வெகுவாக சீரடைந்துள்ளது. முன்பு, சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் சண்டையிட்டுக்கொள்வோம்.
இப்போது எங்கள் உறவு எவ்வளவோ மாறிவிட்டது. அவரின் உதவியின்றி இந்தக் கடிதத்தை எழுதியிருக்க முடியாது. திங்கள்கிழமைதோறும் அவர் என்னைப் பார்க்க வருவார். இருவரும் அரட்டை அடிப்போம். நான் புத்த சமயம் பற்றிப்பேசுவேன். அவர் கேட்டுக்கொண்டே இருப்பார்.  இப்படி இன்னும் எத்தனைத் திங்கள்கிழமைகளோ…..? 
உண்மையில், சிறையில் சிரமம் எதுவும் இல்லை. சிறைக்காவலர்கள் மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள். என்னைப் பற்றி அவர்கள் உயர்வான கருத்தைக் கொண்டிருப்பதாக என் அண்ணன் சொல்வார். அதைக் கேட்டு நெகிழ்து போவேன்.
ஓய்வு நேரத்தில் சமய நூல்களை வாசிப்பேன்.சமய நூல்கள் எல்லாவற்றையும் பயில எனக்குப் போதுமான நேரம் இருக்காதே என்பதை எண்ணிக் கலங்குவேன்.பலரும் சிறையில் இருப்பதைச் சித்திரவதையாக நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அங்குள்ள நேரத்தைப் படிப்பதில் செலவிட முடிகிறதே, அதை நினைத்து மகிழ்வேன்.
எனக்கு மந்திரங்கள் ஓதப் பிடிக்கும். ஆனால், சிறை விதிகளின்படி தியானத்துக்கு மணிமாலைகளைப் பயன்படுத்த முடியாது. அதில் உள்ள மணிகளைக் கூர்மையாக்கி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயலலாம் என்ற அச்சம்தான் காரணம். அதனால்தான் என்னைப் பார்க்கவரும் பிட்சு மாவைச் சின்னச் சின்ன மணிகளாக உருட்டி மாலையாகக் கோத்துக்கொண்டு வருவார். மந்திரம் சொல்லும்போது அவற்றைப் பயன்படுத்திக்கொள்வேன்.
தற்கொலை என்கிறார்களே….அதை நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது. அதை வீணே அழித்துக்கொள்ளக்கூடாது.
யேடியன், இன்று இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி. அமிதாபா.

No comments:

Post a Comment

How to keep your employees respectful