"பிஞ்சு உள்ளங்களுக்கு கல்விக் கண்ணைத் திறக்க முடியவில்லையே என்று அவர்களின் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்"
பள்ளிக்கூடத்தில் சேர்ந்து ஒரு பிள்ளை படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பிறப்புப்பத்திரம் வேண்டும். அதை வைத்துத்தான் பிள்ளைகள் பள்ளிக் கூடத்துக்குள் நுழைய முடியும்.ஆனால், மலேசியாவில்.. மலேசிய இந்திய பெற்றோர்களுக்கு பிறந்த சுமார் 5000 இந்திய பிள்ளைகள் பிறப்புப்பத்திரம் இல்லாத காரணத்தால் பள்ளிக்கூடத்துக்குள் காலடி வைக்க முடியாமல் இருக்கின்றனர்.
இந்த பிஞ்சு உள்ளங்களுக்கு கல்விக் கண்ணைத் திறக்க முடியவில்லையே என்று அவர்களின் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று டத்தோ சிவசுப்பிரமணியம் கூறியிருக்கிறார்.
இந்தியர்களின் பிரச்சினைகளைக் கவனிப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைக் குழுவில் டத்தோ சிவசுப்பிரமணியம் உறுப்பினராக இருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை அரசாங்கம் கவனித்து உடனடியாக பிள்ளைகள் பள்ளிப்படிப்பைத் தொடர் ஆவன செய்ய வேண்டும். இல்லை என்றால் இந்தப் பிள்ளைகள் ஆரம்பக் கல்வியைக் கோட்டை விட வேண்டி இருக்கும் என்று அவர் வேதனை தெரிவித்தார்.
பிறப்புப்பத்திரம் இல்லாததைக் காரணம் காட்டாமல் உடனே பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் அனுமதிக்க அரசாங்கம் உத்தரவிட வேண்டும். அதன் பின்னர் பிறப்புப்பத்திரம் பற்றி விளக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் ஒவ்வொரு பிள்ளையும் ஆரம்பக் கல்வி பெறுவதற்கு எந்தப் பிரச்சினையும் தடையாக இருக்கக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் கல்விச் சாசனம் கூறுகிறது.
அந்த வகையில் பிறப்புப்பத்திரத்தைக் காரணமாக காட்டி ஒரு மாணவனை ஆரம்பப்பள்ளிக்கூடத்திற்கு போவதை தடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. மலேசியாவும் அந்த ஐநா சாசனத்தில் கையெழுத்து இட்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டத்தோ சிவா குறிப்பிட்டார்.
பிப்ரவரி 19- தேதியில் இருந்து பிறப்புப்பத்திரம், அடையாளக் கார்டு சம்பந்தப்பட்ட பதிவு நடவடிக்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனைவரும் பதிந்து கொண்டால் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று டத்தோ சிவ சுப்பிரமணியம் வலியுறுத்தி இருக்கிறார்.
No comments:
Post a Comment