"இண்டர் லோக் நாவல் என்பது கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல. சமுதாயம் சார்ந்த பிரச்சினை"
இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்படவேண்டும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியர்கள் சம்பந்தப்பட்ட வாசகங்கள் ஏற்புடையதல்ல என்று முடிவுக்கு வந்துள்ளது ம.இ.கா.வால் அமைக்கப்பட்ட அறிஞர்கள் ஆய்வுக்குழு.டாக்டர் டி.மாரிமுத்து தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல ஆய்வுகளூக்கு பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து விவாதிக்க சனிக்கிழமை மாலை ம.இ.கா.தலைமையகத்தில் ஆறு. நாகப்பன், சுவை.லிங்கம் போன்ற சமுதாய அறிஞர்கள் பலர் கூடினர்.
அப்போதும் அந்தக் கருத்தே வலியுறுத்தப்பட்டது. இந்த முடிவை ம.இ.கா. தலைமைக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பு பேராசிரியர் மாரிமுத்துவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்பது இந்திய சமுதாயத்தில் இருக்கின்ற எல்லாத் தரப்பினரின் கோரிக்கை. ஆனால், இந்தக் கோரிக்கை இரண்டுவிதமாக வெளிப்படுகிறது.
இண்டர் லோக் பிரச்சினையைக் கையிலெடுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்... இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று அழுத்தமாக குரல் கொடுக்கிறார்கள். இது வரவேற்கக் கூடிய ஒன்று. இதில் மறுப்பில்லை.
அதைவிட.. தேசிய முன்னணியில் பங்காளிக் கட்சியாக இருக்கும் ம.இ.கா.வுக்கும் இப்போதுதான் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் டத்தோ பழனிவேலுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அதில் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது.
எல்லா பிரச்சினைகளையும் ஒரே கண்ணோட்டத்தில் அணுக முடியாது என்பது அறிவார்ந்த சிந்தனை உடையவர்களுக்கு நன்றாகவே தெரியும். இண்டர் லோக் நாவல் என்பது கட்சி சார்ந்த பிரச்சினை அல்ல. சமுதாயம் சார்ந்த பிரச்சினை.
அந்த நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போது அதில் சுருதி பேதம் இருக்கக் கூடாது. நீங்கள் ஆளும் கட்சிக் கூட்டணியில் இருக்கிறீர்கள்.. நீங்கள்தான் இதைத் தீர்க்க வேண்டும் என்று சற்று ஓரங்கட்டி ஒலிப்பது இண்டர் லோக் நாவலை மீட்டுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையின் ஆற்றலைக் குறைத்து விடும் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
நமது சமுதாயத்தில் பல தேவைகள் தீர்க்கப்படாமல் போனதற்கும் அல்லது புறந்தள்ளப்படுவதற்கும் முக்கிய காரணம் அது சம்பந்தமாக தரப்படும் அழுத்தம் தனித்தனியாக இருப்பதுதான். ஒட்டுமொத்த சக்தி வெளிப்படாவிட்டால் நியாயமான கோரிக்கைக்கூட ஓரங்கட்டப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.
இண்டர் லோக் நாவல் குறித்து அமைக்கப்பட்ட குழு ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. அது ம.இ.கா. மூலமாக கல்வி அமைச்சுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது.
அந்த ஆய்வுக் குழு சமர்ப்பித்திருக்கும் பரிந்துரையை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்து இண்டர் லோக் நாவலில் இடம்பெற்று இருக்கும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் அகற்றப்படுவதற்கு இப்போது தேவை இந்திய சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஆதரவு.
இதில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்ற பேதம் கூடாது. தனிப்பட்ட விரோத குரோத எண்ணங்கள் இருக்கக்கூடாது. காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அடுத்தவரை சிக்க வைக்கும் சிந்தனை மேலோங்கக் கூடாது. முக்கியமாக அரசியல் பிரச்சினை ஆக்கி எதிர்ப்பின் வேகத்தை வலுவிழக்கச் செய்யக் கூடாது.
அதே நேரத்தில் ம.இ.கா.வும் இண்டர் லோக் விஷயத்தில் தெளிவான போக்கைக் கொண்டிருக்க வேண்டும். இண்டர் லோக் நாவல் இந்திய சமுதாயத்தில் எழுப்பி இருக்கும் அதிர்ச்சி அலைகளை சரியான கோணத்தில் அமைச்சரவையில் எடுத்து வைக்க வேண்டும்.
மற்ற இடங்களில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு தற்காப்பு பதில் அளிப்பதை நிறுத்தி விட்டு அதையும் இண்டர் லோக் நாவல் பிரச்சினைத் தீர்வுக்கு உரமாக மாற்ற வேண்டும்.
எனக்கு அழைப்புக் கொடுக்கவில்லை அதனால் வரமாட்டேன். என்னைக் கூப்பிடவில்லை அதனால் சாப்பிட மாட்டேன். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால் மீண்டும் நாங்கள் வரமாட்டோ ம் என்று தாமரை இலைத் தண்ணீராக இருக்காமல் இணைந்து செயல்படும் மனப்பக்குவத்தை எல்லாரும் அடைய வேண்டும்.
இந்திய சமுதாயத்தின் நோக்கம் இண்டர் லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்பட வேண்டும். அல்லது சர்ச்சைக்குரிய வாசகங்கள் நீக்கப்படவேண்டும் என்பதுதான். இது சம்பந்தப்பட்ட கோரிக்கையில் சுருதி பேதம் இருக்கக்கூடாது. குற்றம் சுமந்த கோரிக்கைகள் பலத்தை அதிகரிப்பதற்கு பதிலாக பலவீனத்தைக் கூட்டி விடும் என்பது காலம் உணர்த்திய... உணர்த்துகின்ற... உணர்த்தப் போகின்ற உண்மையாகும்.
No comments:
Post a Comment