Sunday, January 16, 2011

10,000 ஆணி படுக்கையில் பரதம்: சாதனை புரிந்த மலேசிய மங்கை

""பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில் நடனமாடும் வகையில், என் கால் பாதங்களை பழக்கப்படுத்த கடும் பயிற்சி எடுத்துக் கொண்டேன்,'' என, மலேசியா நாட்டு இளம் பெண் பூர்ணி கூறினார்.
மலேசியா நாட்டின் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர், இருதயம் செபஸ்தியார். திருச்சி மாவட்டம் சமயபுரம், நரிமேட்டைச் சேர்ந்த இவரது அப்பா அந்தோணி, 1946ம் சமையல் வேலைக்காக மலேசியா சென்றார்; அங்கேயே குடியுரிமை பெற்றார். "செபஸ்தியாரின் கலைக் கூடம்' என்ற பெயரில், 20 ஆண்டாக தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகளை, மலேசியாவில் செபஸ்தியார் நடத்தி வருகிறார். முள் படுக்கையில், 40 அடி உயரத்தில் கரகாட்டம், என்று சாதனை படைத்த செபஸ்தியாருக்கு, "ஆசியாவின் வியப்புகுரிய சாதனை' பட்டியலில் இடம்பெற்றுள்ளார். செபஸ்தியாரின் கலைக்குழுவில் இடம்பெற்றுள்ள 450 கலைஞர்களில், அவரது வளர்ப்பு மகளான பூர்ணியும் (19) ஒருவர்.
 சிறுவயது முதலே பரதநாட்டியத்தில் சாதனை படைக்க வேண்டும் என்று ஆவல். தஞ்சாவூரில் பரதம் கற்ற பூரணி, பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில், பரதம் ஆட விரும்புவதாக தன் தந்தையிடம் தெரிவித்தார். தன் பூ போன்ற பாதங்களை, அதற்கேற்றார் போல் கரடுமுரடாக பக்குவப்படுத்த அவர், முள் படுக்கை மீது பரதம் ஆடி தன் பாதத்தை தயார் செய்தார். நெஞ்சுரம் கொண்ட பூர்ணிக்கு, அந்நாட்டு அரசின் சாதனை பட்டியலில் இடம் பெற முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது. விபரீத சாதனையாளர்களை அந்நாட்டு அரசு அங்கீகரிக்காது. தமிழக கலைப்பண்பாடுத் துறை மற்றும் மலேசிய தேசிய கலாச்சாரத்துறை இணைந்து, தமிழகத்தில், திருச்சி உள்பட ஐந்து இடங்களில் நடத்திய கலாச்சார நிகழ்ச்சியில், பத்தாயிரம் ஆணிகள் கொண்ட முள் படுக்கை மீது பரதம் ஆடி அசத்தினார்.
முள் படுக்கை மீது பரதம் நிகழ்த்தும் விதமாக, என் பாதங்கள் மரத்துப் போக செய்ய வேண்டும். அதற்காக நாள்தோறும் மணலில் சுடு தண்ணீர் ஊற்றி அதன் மீது நீண்ட நேரம் நிற்பேன். பாதங்களின் குழியான பகுதியை நேராக்க மூங்கில் தட்டைகளை பாதத்தில் கட்டி நடப்பேன்; நடனமாடுவேன். பயிற்சி முடிந்ததும் ஆணி மீது நடனமாடத் துவங்கினேன். பயம் கிடையாது. நன்றாக ஆட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. பலமுறை முள் படுக்கையில் ஆடியுள்ளேன். ஆடும் போது பலமுறை ஆணி குத்தி, என் பாதங்களிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தினால், சாதனைபுரிய முடியுமா? இவ்வாறு பூர்ணி கூறினார்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful