பாணி முக்கியம் அல்ல .... தீர்வுதான் முக்கியம்
"சொல்வதைத்தான் செய்வேன்" என்று சொன்னால் அது எங்களுக்கு தேவையில்லை. "செய்வதை மட்டும் சொல்லுங்கள். அதையும் செய்து விட்டு பிறகு சொல்லுங்கள்"
(இன்பா)
ம.இ.கா.வின் எட்டாவது தேசியத் தலைவராக டத்தோ ஜி. பழனிவேல் பொறுப்புக்கு வந்திருக்கிறார். இவர் கட்சியை எப்படி வழி நடத்தப் போகிறார் என அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
புதிய தலைமைத்துவம் வரும்போது மக்களிடையே புதிய எதிர்ப்பார்ப்புகள் உண்டாவது தவிர்க்க முடியாதது. அது கண்டிப்பாக தேவையானதும் கூட. அந்த வகையில் புதிய தேசியத் தலைவரின் ஆற்றலையும் அணுகுமுறையையும் அளவிட இந்திய சமுதாயம் காத்திருக்கிறது.
டத்தோஸ்ரீ சாமிவேலு அதிரடியாக எதையும் செய்யக் கூடியவர். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையும் தன்னம்பிக்கையோடு செயல்படக்கூடியவர். டத்தோ பழனிவேல் அப்படி இருப்பாரா என்ற கேள்வி மட்டுமல்லாமல் இன்னும் பல துணைக் கேள்விகளும் ஒரு சிலர் மத்தியில் நிலவுகிறது.
ஆனால், இது அவசியமற்ற கேள்வி என அரசியல் ஞானமுள்ளவர்கள் கருத்துக் கூறுகிறார்கள். "என் பாணிவேறு.. டத்தோஸ்ரீ சாமிவேலு பாணி வேறு. துணைத்தலைவர் என்ற வகையில் தேசியத் தலைவரின் செயல்பாட்டிற்கும் சேவைக்கும் உறுதுணையாக இருந்திருக்கிறேன். அதே நேரத்தில் முரண்பட வேண்டிய நேரத்தில் நான் தயங்கி நின்றதில்லை. அதை தெளிவாகவே எடுத்துக் கூறியிருக்கிறேன்" என்று பல சமயங்களில் டத்தோ பழனிவேல் கூறியதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
டத்தோஸ்ரீ சாமிவேலுக்கு பேச்சுத் திறமை அதிகம். பேச்சாற்றலால் அனைவரையும் தன்பக்கம் ஈர்ப்பதில் வல்லவர். அது டத்தோ பழனிவேலை பொறுத்தவரை பலவீனம் தான் என ஒரு கருத்தும் நிலவுகிறது.
பேச்சு திறனும் செயல் திறனும் இணைந்து இருப்பது நல்லதுதான். பழனிக்கு அடுக்குமொழியில் பேசுவது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், அவசியமான கருத்துக்களை அவசியமான இடங்களில் அவசியமான நேரத்தில் ஆணித்தரமாக எடுத்து வைப்பதில் வல்லவர் என்பதை அவர் பல கட்டங்களில் நிரூபித்து இருக்கிறார்.
இந்த கால இளைஞர்களின் மனப்போக்கு மாறி இருக்கிறது. "சொல்வதைத்தான் செய்வேன்" என்று சொன்னால் அது எங்களுக்கு தேவையில்லை. "செய்வதை மட்டும் சொல்லுங்கள். அதையும் செய்து விட்டு பிறகு சொல்லுங்கள்" என்ற முற்போக்கான சிந்தனையில் இருக்கிறார்கள்.
ஆகவே, வித்தை தெரிந்த ஒருவருக்கு விலாசம் தேவையில்லை என்பதற்கிணங்க டத்தோ பழனிவேல் கட்சியை எப்படி வழி நடத்தப் போகிறார் என்பதை பார்க்க வேண்டுமே ஒழிய அவர் எப்படி பேசப் போகிறார் என எதிர்பார்ப்பது விவேகமான செயலாக இருக்காது என்ற பதில் கருத்தும் இருக்கிறது.
முன்னாள் தலைவரையும் இந்நாள் தலைவரையும் ஒப்பிட்டு பார்த்து விமர்சனம் செய்கின்ற போக்கும் தற்போது எழுந்துள்ளது. இந்த ஒப்பீடு கூட காலத்துக்கு ஒவ்வாதது. ஒரு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பு மாறும் போது தலைவரின் சிந்தனைக்கு ஏற்பத்தான் செயல்பாடுகளும் சீர்திருத்த நடவடிக்கைகளும் இருக்குமே தவிர முன்னவரின் அடிச்சுவட்டிலேயே பயணப்பட வேண்டும் என நினைப்பது நவீன காலத்துக்கு நன்றாக இருக்காது.
அதே நேரத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலுவோடு நீண்ட காலமாக பணியாற்றியவர் டத்தோ பழனி. மேலும் அவரின் மிக மிக நம்பிக்கைக்கு உரிய மனிதராகவும் இருந்து வந்திருக்கிறார். இருந்தும் வருகிறார்.
கட்சிப் போராட்டங்களிலும் சமுதாயப் போராட்டங்களிலும் தோள் கொடுத்து துணையாக நின்று இருக்கிறார். அந்த சிந்தனையோடுதான் அவர் துணைத்தலைவர் பதவியை அலங்கரித்தார். ஆகவே, பழனி கொண்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்களில் சாமிவேலுவின் பாணி இருக்கலாம். அதே நேரத்தில் தேவையான இடங்களில் மாறுபட்டும் இருக்கலாம். இதை டத்தோ பழனிவேலே பல தருணங்களில் கூறியிருக்கிறார்.
இது ஒரு சவாலான காலகட்டம். தேசிய நீரோட்டத்தில் சுகமான படகுப் பயணத்தை அனுபவித்த காலமல்ல. எல்லா திசைகளிலும் எதிர்பார்ப்புகளும் சவால்களும் கை நீட்டி காத்திருக்கின்றன. அதை எதிர்கொள்ள தேசிய தலைவருக்கு தேவையான ஒரு அவகாசம் தரப்பட வேண்டும்.
நாற்காலியில் ஏறி அமர்ந்தவுடன் "சூ மந்திரகாளி" என்று சொல்லி எல்லா பிரச்சினைகளையும் கிள்ளி எறிந்துவிட முடியாது. ஏனென்றால் இந்திய சமுதாயம் 50 ஆண்டு காலமாகவே பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதை ஐந்து நிமிடத்திலோ ஐந்து நாளிலோ தீர்த்து விட முடியாது.
அப்படி பார்த்தால் ஒரு ஆறு மாதத்தை மறுமலர்ச்சிக்காக ஒதுக்கலாம். அந்த காலகட்டத்திற்குள் கட்சி மேம்பாட்டுக்கும் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் தேசிய முன்னணியின் நம்பிக்கைக்கும் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து டத்தோ பழனிவேல் செயல்படுத்துகிறார். அதில் எந்த அளவுக்கு வெற்றி கண்டிருக்கிறார் என்பதை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.
அந்த வகையில் தேசிய முன்னணியாகட்டும் ம.இ.கா. பேராளர்களாகட்டும் இந்திய சமுதாயத்தினராகட்டும் டத்தோ பழனி மீது அதிருப்தி கொண்டவர்களாகட்டும்.. யாராக இருந்தாலும் இந்த அவகாசம் முடியும் வரை முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும். அதுதான் ஒரு தலைவரின் செயல் திறனை கண்டறியும் சிறந்த அளகோலாக அமையும்.
No comments:
Post a Comment