Thursday, November 4, 2010

இந்துப் பெண்கள் உணர்த்தும் தீபாவளித் தத்துவங்கள்

 புத்தாடை... அதிரசம்.. முறுக்கு.. வெடி... இதெல்லாம்  இந்து மக்கள் தீபாவளிக்குத் தரும் சீதனம். ஆனால், நாகரிக மாற்றம் கேக்.. பிஸ்கெட் என ஐரோப்பிய பண்டங்களை அழைத்து வந்திருந்தாலும் முறுக்குத்தான் தீபாவளியின் கதாநாயகன்... அதிரசம்தான் தீபாவளியின் கதாநாயகி.

ஆண்கள் எப்போதும் முறுக்கிக் கொண்டிருப்பதால் அவர்களை முறுக்குக்கு ஒப்பிடலாம். என்றும் பெண்கள் இனிப்பு அல்லவா.. அதனால்தான் அதிரசம். இது ஒருபுறமிருக்க தீபாவளி பண்டிகை என்பது வாழ்க்கை தத்துவம் என்பதை பெண்கள் எவ்வளவு பக்குவமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா?

தீபத்தை வரிசையாக ஏற்றி வழிபடுவது தீப ஆவளி.. இது வாழ்க்கையை ஒளிமயமாக்குவது.. நமது வாழ்க்கையில் மாற்றக்கூடியவையும் உண்டு.. மாற்றாமல் மாறுதலைக் கொண்டு வருகின்றவையும் உண்டு.. தீபாவளிக்காக கட்டிலை மாற்றலாம்.. ஜன்னல் காட்டனை மாத்தலாம்...கட்டிய கணவனை மாற்ற முடியுமா?

முறுக்கு.. இது நமது வாழ்க்கையில் வரும் சிக்கல்களைக் குறிக்கும். எங்கே ஆரம்பித்திருக்கிறது எங்கே முடிகிறது என தெரியாமல் பின்னிக் கிடக்கும். இந்த சிக்கலைக் கண்டு பயப்படக் கூடாது... குடும்பத்தில்  குத்தாட்டம் போடும் பிரச்சினைகளை முறுக்கை போல நொறுக்கி சாப்பிட்டு விட வேண்டும்..

அதிரசம்.. இது மேல் பகுதியில் வெந்து சற்று கருப்பாக இருக்கும். உள்பகுதியில் வேகாமல் சிவப்பாக இருக்கும். இது மாதிரிதான் வாழ்க்கையும். கணவன் மனைவி குழந்தைகள் என ஒரே குடும்பத்தில் இருந்தாலும் சிந்தனை மாற்றம் இருக்கத்தான் செய்யும். ஆனால், எந்தப் பக்கத்தை தின்றாலும் இனிக்கும் அதிரசம்போல குடும்பத்தினர் இருக்க வேண்டும்.

முறுக்குக்கும் அதிரசத்துக்கும் மாவு பிசைந்து பக்குவப்படுத்த வேண்டும். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து எண்ணெயில்  போட வேண்டும். போட்டவுடன் என்ன  ஆகும். புரியாதவனுக்கு புத்தி சொன்னால் பொங்குவானே அதுபோல் எண்ணெயில் பொங்கி எதிரில் இருப்பவரை பதம்பார்க்க நினைக்கும். கொஞ்ச நேரம்தான். அப்புறம் கும்மாளம் அடங்கி பக்குவத்துக்கு வந்து விடும்.

இது மாதிரி தானே குடும்பத்தில் ஏற்படும் கோபதாபங்களும்.. முதலில் சுனாமி மாதிரி தெரியும். இதைப் பெரிதுபடுத்தாமல் பெண்கள் ஒரு சுந்தரப் புன்னகையை தூதுவிட்டால் கொதிக்கும் எரிமலையாய் இருந்த ஆண்கள் குளிக்கும் நீச்சல் குளமாக மாறிவிடுவார்கள்.

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உப்பு, உவர்ப்பு என அறுசுவைகளையும் சமைத்து பரிமாறுவாள் பெண்.  இலையில் வைத்திருக்கும் அத்தனை பதார்த்தங்களும் குடும்பத்தில் உள்ளவர்கள் என்றால்.... அதைத் தாங்கி நிற்கும் இலை பெண். இது சாதாரண இலை அல்ல.. வாழையடி வாழையாக இனத்திற்கு வீரத்தையும் விவேகத்தையும் வெற்றியையும் அளிக்கின்ற பராசக்தியின் நிலை. குடும்பத்தின் ஆதாரம் அவள்தான். குடும்பத்தின் பொருளாதாரமும் அவள்தான்.. அவள்தான் தாரம்.. அஷ்டமா சித்திகளின் அவதாரம்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful