Monday, November 30, 2009

காதல் வலையில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்கும் இளம் பெண்கள்

"உள்ளக் களித்தலும் காண மகிழ்ந்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டுஔ தெய்வப்புலவர் திருவள்ளுவர் காதலின் மகத்துவத்தைப் பற்றி இப்படி எழுதி யிருக்கிறார்.
கள்ளைக் குடித்தால்தான் போதைவரும். ஆனால், காதலனைக் காதலி பார்த்தோலோ அல்லது உள்ளத்தில் நினைத்தாலோ போதும். மனம் மயக்கத்தில் தள்ளாடும் என்கிறார்.
திருவள்ளுவர் மட்டுமல்ல நமது சங்க இலக்கியங்களும் காதலை புனிதமாகவும் பெருமையாகவும் கூறுகின்றன. புராண இதிகாசங்களிலும் காதலின் முக்கியத்துவத்தைக் கவிஞர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
கவியரசு கண்ணதாசன், கவிஞர் வாலி, கவியரசு வைரமுத்து முதல் இன்றைக்கு எழுதுகோலை எடுத்து கவிதை எழுதுகின்ற அத்தனை கவிஞருக்கும் முக்கிய கருப்பொருளாக இருப்பது காதல்தான்.
கதை இல்லாமல் திரைபடங்களைத் தயாரித்து விட முடியும். ஆனால் காதல் இல்லாமல் திரைப்படங்களைத் தயாரிப்பது என்பது இயலாத காரியம் என்ற நிலையில் இன்றைய சூழ்நிலை இருக்கிறது.இவ்வாறாக எதுகையும் மோனையும் போல இரவும் பகலும் போல தமிழனும் போராட்டமும் போல காதலும் நம்மிடத்தில் பிரிக்கமுடியாது வகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
அப்படிப்பட்ட காதல் இப்போது தடம்மாறிப் போய் பலரின் குடும்பங்களை நாசப்படுத்திக் கொண்டிருப்பதாக ஒரு ஆதங்கம் பொது மக்களிடையே அண்மைக் காலமாக எழுந்திருக்கிறது.இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பெண்களின் வாழ்க்கை முறை வேறு பட்டிருந்தது. இளம் பெண்கள் வீட்டை விட்டு வெளி வருவது கடினமான காரியம்.சிலரது குடும்பங்களில் பெண்கள் வயதுக்கு வந்து விட்டால் படிப்பை நிறுத்தி விடுவார்கள். திருமணமாகி போகும்வரை பொதுவான இடங்களில் அவர்களைப் பார்க்க முடி யாது.
வேற்றுக் குடும்பத்து ஆண்களைச் சந்தித்துப் பேச சந்தர்ப்பம் இல்லாத காரணத்தால் காதல் பிரச்சினைகளுக்கு வழி இல்லாமல் போய் விட்டது. திருமணத் துக்கு ஒரு பெண்ணை பார்க்க வேண்டும் என்றால் கோவிலிலோ உறவுக்காரர் வீடுகளிலோ அந்தப் பெண்ணை மணமகன் பார்ப்பதற்கு வழி அமைத்துக் கொடுப்பார்கள்.
இப்போது பெண்களின் நிலைமை அப்படி இல்லை. ஆண்களுக்கு நிகராக படிக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் வேலை பார்க்கிறார்கள். எந்தச் சவாலையும் சந்திக்கக்கூடிய திறனை அடைந்திருக் கிறார்கள்.
ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே வேலை செய்யும் நிலையில் பெண்கள் இருந்தார்கள். இருட்டுவதற்கு முன்னர் வீட்டிற்கு திரும்பி விடுவார் கள். ஓவர் டைம் என்று சொல்லக்கூடிய மிகை நேர வேலையைக்கூட விரும்பாமல் இருந்தார்கள்.
இதற்கு முக்கிய காரணம் பாதுகாப்பு பிரச்சினைதான். நேரங்கெட்ட நேரத்தில் வெளி இடங்களில் இருந்தால் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தங்களுக்கு பாதுகாப்பான பணியையும் பாதகம் இல்லாத நேரத்தையும் தேர்ந்தெடுத்து வேலை செய்தார்கள்.
இப்போது அந்தக் காலமும் மலையேறி விட்டது. முன்பு பகலில் வேலை பார்க்கவே பயந்தவர்கள் இன்று இரவு நேர வேலைக்கும் செல்கிறார்கள். இரவு நேரத்தில் பொறுப்பாக வேலை பார்ப்பவர்கள் பெண்கள் என்ற சிந்தனை வந்து விட்டதால் பல தொழிற் சாலைகளில் இரவு நேர வேலைக்கு பெண்களையே தேர்ந்தெடுக் கிறார்கள்.
அலுவலகத்துக்குள்ளேதான் வேலை பார்க்க வேண்டும் என்ற பெண்களின் சிந்தனையிலும் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளையும் ஈடுபாட்டோ டு செய்கிறார்கள்.
இது சுயகாலில் நிற்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வேட்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இப்படி வேலை பார்ப்பதில் ஓரளவு சுதந்திரம் பெற்ற பெண்களுக்கு வாழ்க்கைத்துணையைத் தேடுவதிலும் இயல்பாகவே சுதந்திரம் கிடைத்து விடுகிறது.
தனக்குப் பிடித்தமான ஆண்களை சொந்தமாக தேடிக்கொள்ள முடியும். அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. முன்பு ஆண்களிடம் அனாவசியமாக பேச முடியாது. சந்திக்க முடியாது.
இப்போது ஒரு ஆணை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம். எந்த இடத்தில் வேண்டுமா னாலும் பார்க்கலாம். அந்த அளவுக்கு வாழ்க்கை முறை மாறிவிட்டது.
பார்க்கின்ற இடத்தில் பழக முடிகிறது. படிக்கின்ற இடத்தில் பழக முடிகிறது. பயணம் செய்யும் போது பழக்கம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் இவர் நமக்குத் தகுதியானவர் என்று நினைத்து வாழ்க்கைத் துணையை பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆனால், இத்தகைய வாய்ப்பையும் சுதந்திரத்தையும் பெண்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்களா... தகுதியான துணையை தேர்வு செய்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
அண்மைக் காலமாக நமது சமுதாயத்தில்
விவாகரத்து செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கவ லைப்படும் வகையில் அதிகரித்து இருக்கிறது. இப்படி விவாகரத்தை நாடுகின்றவர்களில் பெரும்பான்மை யானோர் பேசிப் பழகி விரும்பி நேசித்து காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இவர்கள் விவாகரத்து செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொண்டு சந்தோசமாக வாழத்தான் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
முன்பு அறிமுகம் இல்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு வந்தால் பரவாயில்லை. இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுதான் வாழ்க்கையில் இணைகிறார்கள்.
உடுத்துகின்ற உடையைத் தேர்ந்தெடுப்பதற்கு கடைகடையாக ஏறி இறங்குகிறார்கள். போடுகின்ற செறுப்பைக்கூட பொறுப்போடு வாங்குகிறார்கள். ஆனால், காதலைனைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மட்டும் உணர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திக் கொள்கிறார்கள்.
அதற்காக பத்துபேரோடு பழகி ஐந்து பேரைத் தேர்வு செய்து இரண்டு பேரோடு குடும்பம் நடத்தி ஒருத்தரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. ஒருவரைத் தேர்ந்தெடுத்தாலும் அவரின் பலம், பலவீனம், குண நலன்ககளைக் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா.
படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு பெண். அவளுடைய குடும்பத்தினரும் மரியாதை மிக்கவர் கள். அவள் ஒரு பையனை விரும்புகிறாள். அவன் வேலை இல்லாதவன். அடிதடிகளில் சம்பந்தப்பட்டு நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொண்டிருப்பவன். ஒரு கோவிலில் இவர்கள்?கொஞ்சிக் கொஞ்சி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
வரும்காலங்களில் இவர்கள் எப்படி ஒற்றுமை யோடு வாழ இயலும்.இது பொருந்தாக் காதல்தானே. அந்தக் குடும்பத்துக்கு மிகவும் வேண்டிய ஒருவர் இதைச் சொல்லி என்னிடம் வருத்தப்பட்டார்.
சில பெண்கள் இது போன்ற மாயக் காதல்களில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைத்த கதையும் உண்டு. திருமணம் செய்து கொள்ளாமல் காதலனோடு ஒரு வீட்டில் தங்கி வேலை பார்த்தாள் ஒரு பெண்.
நான்கு மாதங்கள்தான் இவர்களுடைய வாழ்க்கை நிலைத்தது. காதலனுக்கு வேறு ஒரு பெண்ணிட மிருந்து போன் வருவதை அறிந்து சண்டை போட் டாள்.
ஒருகட்டதில் சண்டை முற்றி கண்ணாடி மேஜையைத் தூக்கி காதலியின் தலையில் அடித்து விட்டான். தலை சிதறி காதலி மாண்டு விட்டாள். கெப்போங் வங்சா பெர்மாய் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்.
ஈப்போவைச் சேர்ந்த காதலர்கள். அவளை வீட்டிற்கு தெரியாமல் அழைத்து வந்து கோத்தா டாமான்சாரா என்ற இடத்தில் ஒரு அடுக்குமாடி வீட்டில் குடி வைக்கிறான். ஒரு வாரம் கழிந்தது. வேலை தேடி விட்டு வருகிறேன் என்று போனவன் போனவன் தான்.
சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அல்லாடிய அந்தப் பெண்ணைப் பார்த்த சில நல்ல உள்ளம் கொண்டோ ர் அவளுடைய குடும்பதினருக்கு தகவல் சொல்லி அவளை அழைத்து போக வைத்தனர்.
கடைசிவரை உன்னைக் கண்கலங்காமல் வைத்திருப்பேன் என சத்தியம் செய்து காதலித்து பின்னர் சௌக்கிட் போன்ற பகுதிகளில் பாலியல் தொழில் தரகர்களிடம் விற்று விட்டு கம்பி நீட்டிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன, நடந்து கொண்டும் இருக் கின்றன.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பெரும்பாலான பெண்கள் தெரிந்தே பாழும் கிணற்றில் விழத் தயாராக இருக்கிறார்கள். இது ஏன்...
கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லையா... அல்லது பெற்றோர்களுடைய கவனிப்பு அறவே இல்லாமல் இருப்பதா... சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமா... என்பதை சரியான கோணத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இவர்கள் தவறாக தேர்ந்தெடுக்கின்ற துணையின் காரணமாக பாதிக்கப்படப் போகிறவர்கள் இவர்கள் மட்டுமல்ல.. இவர்களின் பெற்றோர்கள், இவர்களுக்கு பிறந்திருக்கும் குழந்தைகளும்தான்.
கோலாலம்பூரில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொஞ்ச காலம் வாழ்கிறான். இரண்டு குழந்தையைப் பெற்றுக் கொள்கிறான். பின்னர் இவளை விட்டுவிட்டு ஜொகூரில் போய் இன்னொருத் தியை மணந்து அங்கு நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்கிறான்..
இவனுக்கு பிறந்த குழந்தை களோடு வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பாள் இந்தப் பெண். அடுத்து அந்தப் பெண்ணுக்கும் இதே கதிதான். இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.
பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாமல் வளரும் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும். சமுதாயப்பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாகவே இவர்களுடைய வளர்ச்சி இருக்கும் என்பதுதான் உண்மை.சமுதாயப் பிரச்சினைகளை உருவாக்கும் விதை கள் என்றுகூட இவர்களைச் சொல்லலாம். ஆகவே இதைக் களைய வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்குமே இருக்கிறது.
காதலிப்பது தவறு என்று சொல்லவில்லை. காதலர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்து விடக் கூடாது. ஒருவரிடம் பழகும்போது எல்லாமே நல்ல தாகத்தான் தெரியும். செய்கின்ற காரியங்கள் அனைத்தும் சந்தோஷமாகவே இருக்கும்.
ஆனால், வாழ்க்கை என்று வருகின்றபோது எதிர்மறையாக போகக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.இதை உணர்ந்து பெண்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஓசமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்.. விவசாயம் மோசமானால் ஒரு ஆண்டு நஷ்டம்... திருமணம் மோசமானால் வாழ்க்கையே நஷ்டம்ஔ என்று பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இந்தச் சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு இன்றைய பெண்கள் காதலனைத் தேர்வு செய்வதில் கவனமுடன் இருந்தால் வாழ்கின்ற நாட்கள் எல்லாம் வசந்தம் வீசும் என்பதில் சந்தேகமில்லை.

src:www.vanakkammalaysia.com
26-11-2009 (19:05:12)

No comments:

Post a Comment

How to keep your employees respectful