Friday, October 22, 2010

லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா

டேராடூன்: இந்தியா முதல் முறையாக லேசர் கதிர்வீச்சின் உதவியுடன் இயங்கும் வெடிகுண்டை (Laser Guided Bomb-LGB) உருவாக்கியுள்ளது.

இந்த லேசர் குண்டு மூலம் குறிப்பிட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். டேராடூனைச் சேர்ந்த உபகரண ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் இந்த லேசர் குண்டை இந்தியா உருவாக்கியுள்ளது.

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவை அடையும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை இந்தியாவின் பாதுகாப்பு [^] மற்றும் ஆய்வுக் கழகமான டிஆர்டிஓ மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த லேசர் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வு டேராடூனில் நடந்து வருகிறது.

லேசர் குண்டின் தொழில்நுட்பம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இலக்கை சரியாக கணித்து அதை லேசர் கதிர்வீச்சு அடையாளம் காட்டும். பிறகு அந்த இலக்கை நோக்கி குண்டு எறியப்படும். அப்போது அது மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும்.

லேசர் மூலம் இலக்கை சரியாக அடையாளம் காண்பதால் தாக்குதலும் துல்லியமாக இருக்கும்.

இந்த லேசர் குண்டு தொழில்நுட்பம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரைச் சேர்ந்த ஏரோனாட்டிக்ஸ் வளர்ச்சிக் கழகம் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் நடந்த ஆய்வில் டேராடூன் கழகம் தற்போது லேசர் குண்டைக் கண்டுபிடித்துள்ளது.

உலகின் முதல் லேசர் குண்டைப் பயன்படுத்திய பெருமை அமெரிக்காவிடம் உள்ளது. 60களில் அமெரிக்கா முதல் முறையாக லேசர் குண்டுகளை உருவாக்கியது. பின்னர் ரஷ்யாவும், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரிட்டனும் லேசர் குண்டுகளை உருவாக்கின. தற்போது இந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது.

லேசர் குண்டுகளைப் போல லேசர் உதவியுடன் இயக்கப்படும் ஏவுகணைகளும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

How to keep your employees respectful